மத்தேயு நற்செய்தி அதிகாரம் 9
மத்தேயு 9
முடக்குவாதமுற்றவரைக் குணப்படுத்துதல் (மாற் 2:1-12; லூக் 5:17-26)
- இயேசு படகேறி மறுகரைக்குச் சென்றுதம் சொந்தநகரை அடைந்தார்.
- அப்பொழுது சிலர் முடக்குவாதமுற்ற ஒருவரைக் கட்டிலில் கிடத்தி அவரிடம் கொண்டு வந்தனர். இயேசு அவர்களுடைய நம்பிக்கையைக்கண்டு முடக்குவாதமுற்றவரிடம், “மகனே, துணிவோடிரு, உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன” என்றார்.
- அப்பொழுது மறைநூல் அறிஞர்கள் சிலர், “இவன் கடவுளைப்பழிக்கிறான்” என்று தமக்குள் சொல்லிக் கொண்டனர்.
- அவர்களுடைய சிந்தனைகளை இயேசு அறிந்து அவர்களை நோக்கி, “உங்கள் உள்ளங்களில் நீங்கள் தீயன சிந்திப்பதேன்?
- ‘உன் பாவங்கள் மன்னிக்கப்பட்டன’ என்பதா, ‘எழுந்துநட’ என்பதா, எது எளிது?
- மண்ணுலகில் பாவங்களை மன்னிக்க மானிடமகனுக்கு அதிகாரம் உண்டு என்பதை நீங்கள் அறிந்துகொள்ள வேண்டும்” என்றார். எனவே அவர் முடக்குவாதமுற்றவரை நோக்கி, “நீ எழுந்து உன்னுடைய கட்டிலைத் தூக்கிக்கொண்டு வீட்டுக்குப் போ”என்றார்.
- அவரும் எழுந்து தமது வீட்டுக்குப்போனார்.
- இதைக்கண்ட மக்கள் கூட்டத்தினர் அச்சமுற்றனர். இத்தகைய அதிகாரத்தை
மனிதருக்கு அளித்த கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர்.
மத்தேயுவை அழைத்தல் (மாற் 2:13-17; லூக் 5:27-32)
- இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார்.
- பின்பு அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்த போது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர்.
- இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர்.
- இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை.
- ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும் புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக்கொள்ளுங்கள்; ஏனெனில் நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.
நோன்புபற்றிய கேள்வி (மாற் 2:18-22; லூக் 5:33-39)
- பின்பு யோவானின் சீடர் இயேசுவிடம் வந்து, “நாங்களும் பரிசேயரும் அதிகமாக நோன்பு இருக்க, உம்முடைய சீடர்கள் ஏன் நோன்பு இருப்பதில்லை?” என்றனர்.
- அதற்கு இயேசு அவர்களை நோக்கி,”மண மகன் தங்களோடு இருக்கும்வரை மணவிருந்தினர்கள் துக்கம் கொண்டாட முடியுமா? மணமகன் அவர்களை விட்டுப் பிரியவேண்டிய காலம் வரும். அப்போது அவர்களும் நோன்பு இருப்பார்கள்.
- மேலும் எவரும் பழைய ஆடையில் புதிய துணியைஒட்டுப் போடுவதில்லை. ஏனெனில் அந்த ஒட்டு ஆடையைக் கிழித்துவிடும்; கிழிசலும் பெரிதாகும்.
- அதுபோலப் பழைய தோற்பைகளில் புதிய திராட்சை மதுவை ஊற்றி வைப்பதில்லை. ஊற்றி வைத்தால் தோற்பைகள் வெடிக்கும்; மதுவும் சிந்திப்போகும்; தோற்பைகளும் பாழாகும். புதிய மதுவைப் புதிய தோற்பைகளில்தான் ஊற்றி வைப்பர். அப்போது இரண்டும் வீணாய்ப் போகா” என்றார்.
இரத்தப் போக்குடைய பெண் நலம் பெறுதலும் சிறுமி உயிர்த்தெழுதலும் (மாற் 5:21-43; லூக் 8:40-56)
- அவர்களுடன் இவ்வாறு இயேசு பேசிக்கொண்டிருந்தபொழுது, தொழுகைக்கூடத் தலைவர் ஒருவர் அவரிடம் வந்து பணிந்து, “என்மகள் இப் பொழுதுதான் இறந்தாள். ஆயினும் நீர் வந்து அவள் மீது உம் கையை வையும். அவள் உடனே உயிர் பெறுவாள்” என்றார்.
- இயேசு எழுந்து அவர் பின்னே சென்றார். இயேசுவின் சீடர்களும் அவரைப் பின் தொடர்ந் தனர்.
- அப்பொழுது பன்னிரு ஆண்டுகளாய் இரத்தப்போக்கினால் வருந்திய ஒரு பெண் அவருக்குப்பின்னால் வந்து அவரது மேலுடையின் ஓரத்தைத் தொட்டார்.
- ஏனெனில் அப்பெண், “நான் அவருடைய ஆடையைத் தொட் டாலே போதும், நலம்பெறுவேன்” எனத் தமக்குள் சொல்லிக்கொண்டார்.
- இயேசு அவரைத் திரும்பிப் பார்த்து, “மகளே, துணிவோடிரு; உனது நம்பிக்கை உன்னைக் குணமாக் கிற்று’ என்றார். அந்நேரத்திலிருந்தே அப்பெண் நலம் அடைந்திருந்தார்.
- இயேசு அத்தலைவருடைய வீட்டிற்குச் சென்றார். அங்கே குழல்ஊது வோரையும் கூட்டத்தினரின் அமளியையும் கண்டார்.
- அவர், “விலகிப்போங்கள்; சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்” என்றார். அவர்களோ அவரைப் பார்த்து நகைத்தார்கள்.
- அக்கூட்டத்தினரை வெளியேற்றியபின் அவர் உள்ளே சென்று சிறுமியின்கையைப் பிடித்தார் அவளும் உயிர் பெற்று எழுந்தாள்.
- இச்செய்தி அந் நாடெங்கும் பரவியது.
பார்வையற்றோர் இருவர். பார்வை பெறுதல்
- இயேசு அங்கிருந்து சென்ற போது பார்வையற்றோர் இருவர். “தாவீதின் மகனே. எங்களுக்கு இரங்கும்” என்று கத்திக்கொண்டே அவரைப் பின்தொடர்ந்தனர்.
- அவர் வீடுவந்து சேர்ந்ததும் அந்தப் பார்வையற்றோரும் அவரிடம் வந்தனர். இயேசு அவர்களைப் பார்த்து, “நான் இதைச் செய்ய முடியும் எனநம்பு கிறீர்களா?” என்று கேட்டார். அதற்கு அவர்கள், “ஆம், ஐயா” என்றார்கள்.
- பின்பு அவர் அவர்களின் கண்களைத் தொட்டு, “நீங்கள் நம்பியபடியே உங்களுக்கு நிகழட்டும்” என்றார்.
- உடனே அவர்களின் கண்கள் திறந்தன. யேசுஅவர்களை நோக்கி. “யாரும்இதை அறியாதபடி பார்த்துக் கொள்ளுங்கள்” என்று மிகக்கண்டிப்பாகக் கூறினார்.
- ஆனால் அவர்கள் வெளியேபோய் நாடெங்கும் அவரைப் பற்றிய செய்தியைப் பரப்பினார்கள்.
பேச்சிழந்தவர் பேசுதல்
- அவர்கள் சென்றபின் பேய்பிடித்துப் பேச்சிழந்த ஒருவரைச் சிலர் அவரிடம் கொண்டு வந்தனர்.
- பேயை அவர் ஒட்டியதும் பேசஇயலாத அவர் பேசினார். மக்கள் கூட்டத்தினர் வியப்புற்று, “இஸ்ரயேலில் இப்படி ஒருபோதும் கண்டதில்லை” என்றனர்.
- ஆனால் பரிசேயர், “இவன் பேய்களின் தலைவனைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறான்” என்றனர்.
இயேசுவின் பரிவுள்ளம்
- இயேசு நகர்கள். சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். எங்கும் அவர்களுடைய தொழுகைக்கூடங்களில் கற்பித்தார்; விண்ணரசைப்பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும்.குணமாக்கினார்.
- திரண்டிருந்த மக்களை அவர்கண்டபோது அவர்கள்மேல் பரிவுகொண்டார்: அவர்கள் ஆயர் இல்லா ஆடுகளைப்போல அலைக்கழிக்கப்பட்டு சோர்ந்து காணப்பட்டார் கள்.
- அப்பொழுது அவர் தம்சீடரை நோக்கி, “அறுவடைமிகுதி; வேலையாள்களோ குறைவு.
- ஆகையால் தேவையான வேலையாள்களைத் தமது அறுவடைக்கு அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன்றாடுங்கள்” என்றார்.
